பிரசாரத்துக்காக வெயிலில் அலைந்ததால் கருத்துவிட்டதாக மதுரையில் பேசியுள்ளார் ஸ்டாலின். எம்.ஜி.ஆரைவிட, ஸ்டாலின் ஒன்றும் அழகனல்ல. எம்.ஜி.ஆர்கூட தன்னை அழகன் என எந்தக் கூட்டத்திலும் சொன்னதில்லை. என ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துப் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் மோகனை அதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வசவப்பபுரம், வல்லநாடு, செக்காரக்குடி, ஓசாநூத்து, ஒட்டநத்தம், சவலாப்பேரி ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், செக்காரக்குடியில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளை முன்னிட்டும், அன்னையர் தினத்தை முன்னிட்டும் கிராமப் பெண்கள், வயதானவர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து, ஒரு பெண் குழந்தைக்கு ஜெயலெட்சுமி என பெயர் வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசுகையில், “அ.தி.மு.க-வால் முந்தைய தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன பிறகு, தினகரனுடன் கைகோத்து கட்சிக்குத் துரோகம் இழைத்த இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வால்தான் இந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்துள்ளது. டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க-வில் உறுப்பினராக இல்லை. அவரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்து வைத்திருந்தார். அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை கவிழ்க்க செய்த முயற்சிகளும் தோல்வியைத் தழுவியது. தினகரனுக்கு வாழ்வு கொடுத்ததும் அ.தி.மு.க-வும் இரட்டை இலைச் சின்னமும்தான். ஆனால், அந்தச் சின்னத்தை முடக்க திட்டமிட்டு உச்சநீதிமன்றம் சென்றவர்தான் தினகரன்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அ.ம.மு.கவைச் சேர்ந்த தினகரனும் நேரில் பார்த்தால் எதிரியாகவும், மறைமுகமாக ஒற்றுமையாகவும் உள்ளனர். இதை தங்க தமிழ்ச்செல்வனே போட்டு உடைத்துவிட்டார். இந்தத் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடுவது அவர்கள் வெற்றி பெறுவதற்காக அல்ல. தி.மு.க-வை வெற்றி பெறச் செய்வதற்காகத்தான். தான் ஒரு கட்சியின் தலைவர் என்ற கர்வத்தில், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்தான் ஸ்டாலின். அவருக்கு 70 வயதாகிறது. இந்த வயதிலும் டி.சர்ட், பேன்ட் போட்டுக்கொண்டு தன்னை ஒரு இளைஞனைப் போலக் காட்டிக் கொள்கிறார்.
தான் ரொம்ப கலரானவர் என்றும், பிரசாரத்துக்காக வெயிலில் அலைந்ததால் கருத்துவிட்டதாகவும் மதுரையில் பேசியுள்ளார். எம்.ஜி.ஆரைவிட ஸ்டாலின் ஒன்றும் அழகனல்ல. எம்.ஜி.ஆர்கூட தன்னை அழகன் என எந்தக் கூட்டத்திலும் சொன்னதில்லை. கேபிள் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டும் ஸ்டாலின், தயாநிதி குடும்பத்துக்கு 40 சேனல்கள் வரை உள்ளது. 56 ரூபாய் கட்டணமாக செலுத்தினால்தான் பார்க்க முடியும்.
முதலில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான 40 சேனல்களின் கட்டணங்களைக் குறைத்தாலே மற்ற சேனல்களின் கட்டணங்கள் தானாக குறைந்துவிடும். துனை முதல்வராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்காத ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது மக்களைச் சந்தித்து ஏமாற்றி வருகிறார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதும், காப்பீட்டு நிறுவனங்களில் முழுமையாக காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததும் அ.தி.மு.க அரசு மட்டும்தான்.” என்றார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









