தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம், புளியங்குடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி அங்காடி மற்றும் வாசுதேவ நல்லூரில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையத்தினை 12.05.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக் குமார் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கென பல்லாயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நகர உட்கட்டமைப்பு வசதிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சியில், பேருந்து நிலைய கட்டடம் பழுதடைந்து இருந்ததால் புதிய நவீன பேருந்து நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு மாற்றுவதற்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டடம் அமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் தொழில் நுட்ப அனுமதியும் பெறப்பட்டது. தற்போது பேருந்து நிலைய பணிகள் நல்ல முறையில் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
புதிதாக கட்டப்பட்டு உள்ள பேருந்து நிலையத்தில் 20 பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதிகளும், ஒரு உணவு விடுதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேர காப்பாளர் அறை மற்றும் கட்டண கழிப்பறை ஒன்று மற்றும் 39 வணிக கடைகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் 45,000 மக்கள் பயனடைவார்கள். தொடர்ந்து, புளியங்குடி நகராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 74 கடைகள் கொண்ட காந்தி தினசரி அங்காடி கட்டிடம், இலவச ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் 50,000 மக்கள் பயனடைவார்கள். மேலும். வாசுதேவ நல்லூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையமும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சங்கரன் கோவில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலெட்சுமி, சங்கரன் கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன் கோவில் நகராட்சி ஆணையாளர் (கூ.பொ) நாகராஜன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தர்ராஜன், புளியங்குடி நகராட்சி ஆணையாளர் ஷாம் கிங்சன், வாசுதேவ நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா, வாசுதேவ நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதுருனிஷா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்