இராமநாதபுரம், அக்.5- ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் இன்று மதியம் கையும், களவுமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தனது பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய தாசில்தார் தென்னரசுவை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார்.
ரூ. 3 லட்சம் லஞ்சம். கேட்ட தென்னரசு, அதில் முதல் தவணையாக ரூ. 1 லட்சத்தை தருமாறு கேட்டார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்சம் ஒழிப்பு போலீசில் கருப்பையா இன்று காலை புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கருப்பையாவிடம் லஞ்சம் ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்து அனுப்பி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்தனர். கருப்பையாவிடமிருந்து ரூ.1 லட்சம் லஞ்ச பணத்தை தென்னரசு இன்று மதியம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக தென்னரசுவிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.