மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பன் புயல் கடல் சீற்றத்தால் கடலில் அமைக்கப்பட்டு வரும் கருங்கற்களால் ஆன அலை தடுப்புச்சுவற்றின் ஒருபகுதி கடலில் அடித்து செல்லப்பட்டு,சேதமடைந்து. இதனால் படகு நிறுத்தும் தளத்தில் தண்ணீர் புகுந்து படகுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டது. சேதமடைந்த பகுதியை பூம்புகார் சட்டமன்ற ஆஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஆய்வு செய்து, உடனடியாக பாதிப்படைந்த பகுதியை சரிசெய்து தரக்கோரி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
முதலமைச்சர் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட இடத்தை மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் ஐ.ஏ.எஸ் இன்று நேரில் வந்து பார்வையிட்டார். தடுப்புச்சுவற்றை உடனடியாக சரிசெய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மீனவர்கள் அலைதடுப்பு சுவரின் அகலத்தையும் உயரத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக குதிரைத்திறன் கொண்ட விசைப்படகுகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவோர், அதிவேக விசைப்படகுகளை பயன்படுத்துவோரை கண்காணிக்க முதல்முறையாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளதாக இதில் 120 போலீசார் கடல் பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்வார்கள் என தெரிவித்த இயக்குநர், சேதமடைந்த கருங்கல்லால் ஆன தடுப்புச்சுவரை ஆய்வு செய்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க துறைமுக கட்டுமானப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் மீனவர்களிடம் கூறுகையில் மீன்பிடிக்கச் சென்று இலங்கையில் சிக்கியுள்ள 12 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு வருவதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, முதல்வரிடம் பேசி அதிகாரிகளின் ஆய்வுக்கு ஏற்பாடு செய்த பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜூக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.