தேனி மாவட்டம் போடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் விதமாக, நகராட்சி சார்பில் வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அத்துடன், முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.இதையும் மீறி சில இடங்களில், சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதி குப்பை மேடாக உருவாவதுடன், மக்களுக்கு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், குப்பை கொட்டும் இடங்களில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, போடி நகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட தென்றல் நகர் சமுதாய கூடம் முன்பாக குப்பை கொட்டும் இடத்தை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான் சையது இப்ராஹிம் தலைமையிலான டெங்கு தடுப்பு பணியாளர்கள் சுத்தம் செய்து அழகிய வண்ணக் கோலங்களை போட்டனர். அதில், ‘குப்பைகளை கொட்டாதீர்கள்’ எனவும் எழுதி வைத்தனர்.தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் ‘குப்பைகளை சாலைகளில் கொட்டக்கூடாது, மக்கும் குப்பை; மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும், தண்ணீர் தேங்க விடக்கூடாது’ என அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர் பொன்ராஜ், கள அலுவலர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.