திரைப்பட நடிகர் ரஜினியின் இயற்பெயரான “சிவாஜி ராவ் கெய்க்வாட்” பெயரில் ரஜினி படித்த பெங்களூரு ஏ.பி.எஸ் கல்லூரியில் ரத்ததானக் கழகம் தொடங்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பூ.திருமாறன் தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்து உள்ளது புகழ்பெற்ற ஏ.பி.எஸ் கல்லூரி. இக்கல்லூரியில் 5000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நடிகர் ரஜினி 1964ஆம் ஆண்டில் இங்குள்ள மாலை நேர கல்லூரியில் படித்துள்ளார். அதற்கான ஆதார ஏட்டினை இன்றளவும் முதல்வர் சுதர்ஸன் பாதுகாத்து வருகிறார்.

சுமார் 90 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்லூரியில் ரஜினியை பெருமைப் படுத்தும் விதமாக ரஜினியின் இயற்பெயரான “சிவாஜி ராவ் பெயரில் “சிவாஜி ராவ் கெய்க்வாட்” ரத்ததான கழகம் வரும் 23.05.2025 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு ஏ.பி.எஸ் கல்லூரி வளாகத்தில் துவக்கப்பட உள்ளது. ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்ய தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். சிவாஜி ராவ் கெய்க்வாட் ரத்ததானக் கழக துவக்க விழாவில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட், பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், 1987 ஆம் ஆண்டு முதல் உலகமெங்கும் ரத்ததானக் கழகங்களை ரஜினி பெயரில் துவக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ. திருமாறன் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு உள்ளார். தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிக்கும் இரத்ததானக் கழக துவக்க விழா பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே.23 பெங்களூர் இரத்ததான முகாமில் இரத்த தானம் செய்ய தமிழக, கர்நாடக ரஜினி ரசிகர்கள், முன்னாள் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முகாமில் பெறப்படும் ரத்தம் நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட இருப்பதாக கல்லூரி ஸ்தாபகர் ஸ்ரீ அனந்தச்சர், ஏ.பி.எஸ் கல்லூரி தலைவர் டாக்டர். விஷ்ணு பிரசாத், கல்லூரி செயலர் பேராசிரியர் பிரகாஷ், ஏ.பி.எஸ் மாலை கல்லூரி முதல்வர் சுதர்ஸன் குமார் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். மூதாதையர் மராத்தி, பெற்றோர் வாழ்ந்தது தமிழகத்தின் நாச்சிக்குப்பம், பிறந்து வளர்ந்தது பெங்களூரு பசவன்குடி, உச்சகட்ட புகழ் உலகமெங்கும் என திகழும் ரஜினிக்கு இந்த ரத்ததானக் கழகம் பல நூற்றாண்டுகள் பெயர் சொல்லும் என திருமாறன் கருத்து தெரிவித்துள்ளார். அவசர கால சிகிச்சைகளுக்கு பெங்களூர் மருத்துவ மனைகள், குறிப்பாக அரசு மருத்துவ மனைகளுக்கும் இனி “சிவாஜி ராவ் கெய்க்வாட்” ரத்ததானக் கழகத்தின் உதவி அபரிதமாக இருக்க வாழ்த்துக்கள் என கிருஷ்ணாஜி ராவ் தெரிவித்துள்ளார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை முதல்வர் சுதர்சன் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் நூற்றுக் கணக்கில் சுமார் 1000 ரஜினி ரத்தானக் கழகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.