உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்!- தமிழக பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை..

“அரசியல் நாகரீகத்தை குழி தோண்டி புதைத்து, ஊழல் இனத்திற்கு இலக்கணமாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது”

சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும், தமிழர்தம் பெருமையை போற்றும் கீழடி நாகரீகத்தை குறித்தும் பெருமையோடு பேச வேண்டிய கருத்தரங்கில், சம்பந்தமே இல்லாமல், நாகரீக எல்லைகளைத் தாண்டி, தமிழகத்தில் இனவாதத்தையும், பிரிவினை வாதத்தையும், மதவாதத்தையும் ஊக்குவித்து, ஊழல் இனத்திற்கு இலக்கணமாக விளங்கும் திமுக அரசு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு பேசுவது வியப்பையும் வருத்தத்தையும் தருகிறது.

தமிழகத்தில் திமுக அரசு 1967-ல் பொறுப்பேற்றது முதல் ஆட்சிக் கட்டிலில் அமரும் பொழுதெல்லாம் வரலாற்றைத் திருத்திப் பேசுவதும், தங்கள் கட்சிக்கு இல்லாத பெருமையை, தங்கள் ஆட்சி செய்யாத செயல்களை எல்லாம் செய்தது போல பொய் பேசி மாணவர்களையும் இளைஞர்களையும் சமுதாயத்தையும் ஏமாற்றி வருவது இன்றளவும் தொடர்ந்து வருவது தமிழகத்திற்கு ஆபத்தானது.

மறைந்த முதல்வர் அண்ணா ஆட்சி காலத்தில் ஆரம்பித்து, கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து, தற்போது அண்ணன் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் வளர்ந்து மேலோங்கி, தேர்தல் வாக்குறுதிகள் முதல், நாளொரு மேனி பொழுது வண்ணமாக ஒவ்வொரு கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் பொய்களை கட்டவிழ்த்து, மக்கள் விரோத ஊழல் திமுக ஆட்சியை குறித்து தீவிரமாக பெருமை பேசி தமிழ் சமுதாயத்தை ஏமாற்றி வருவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும்.

உலக நாகரிகங்களில் இல்லாத அளவிற்கு பெருமையும், பெரும் வரலாற்று பின்னணியும் கொண்ட, மூத்த குடி பிறந்த தமிழ் நாகரிகத்தின் பெருமை குறித்து, உலகம் போற்றும் திராவிட நாகரிகத்தின் சிறப்புகள் குறித்து பேசும் பொழுது, தமிழின விரோத திமுக கட்சி குறித்தும், திராவிட மாடல் அரசுஎன்ற குறித்தும், மனசாட்சியே இல்லாமல் பெருமை பேசுவது நியாயமா?

மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் அவலங்களை எதிர்த்து தமிழகத்திலே அனைத்து கட்சிகளும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இது குறித்து சிறிதும் வருத்தப்படாமல், தன்னுடைய ஆட்சியை தானே புகழ்ந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலினின் பேச்சால், தமிழக மக்களுடைய கோபத்தை, இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான மனநிலையை திசை திருப்பி ஏமாற்ற முடியாது.

திமுக ஆட்சியில் நவீன எமர்ஜென்சி தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அடக்குமுறை ஆட்சியை மக்களின் அமைதி புரட்சி முறியடிக்கும் என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதே வழியில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பிரகடனம் செய்துவிட்டீர்களா?” என்று துணிச்சலுடன் கேள்வி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,” பின்விளைவுகள் ஏற்படும்” என்ற முரசொலியின் மிரட்டலுக்கு பயப்படாமல், மீண்டும் மீண்டும் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.

மேலும் பாஜக வழியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வேண்டுகோள் விடுத்தபடி தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் தமிழக மக்களின் நலன் காக்க ஒன்றிணைந்து திமுக ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து, திமுக அரசின் கூட்டணி கட்சியாக இருந்தும், திமுக ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களை எச்சரிக்கும் வகையில், தமிழக முதல்வரின் மனசாட்சியான முரசொலியின் மிரட்டலைத் தொடர்ந்து, கே. பாலகிருஷ்ணனுக்கு அவரது கட்சியில் பதவி நீடிப்பு வழங்கப்படவில்லை என்று ஒரு கருத்தைப் பரப்பி, தமிழகத்தின் நிலை குறித்த உணர்வு பூர்வமான கருத்தை தெரிவித்த அவரை அரசியலில் அவரது கட்சியிலேயே முடக்க நினைப்பது தமிழக அரசியலில் அபாயகரமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறது.

“யார் அவர்?” என்று கேள்வி கேட்டால் கூட்டணியில் உள்ள மாற்றுக் கட்சியை சார்ந்த தலைவரை, “நீ பதவியில் இனி நீடிக்க முடியாது. பின்விளவை பற்றி கவலைப்படாமல் பேசுவதா?” என்று முதல்வரின் மனசாட்சி முரசொலி கூறும் செய்தி திமுக கூட்டணியில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக படுகொலை செய்யும் திமுகவை, ஜனநாயக வழியில் ஒரு கட்சி கேள்வி கேட்க கூடாதா? தமிழக காவல்துறை ஏன் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுகிறது? ஜனநாயகத்தில் மக்கள் இயக்கங்களும் அமைதியான போராட்டங்களும் இன்றியமையாதது என்றும் “இனி தமிழகத்தில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லையா? ஒரு குடிமகன் பாதிக்கப்படும்போது அவர்களின் உரிமைகளுக்காக போராடாமல் இருக்க முடியுமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பாணியில், துணிவுடன் முதல்வர் ஸ்டாலினை கேள்வி கணையால் துளைத்தெடுத்த அண்ணன் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் முதுகெலும்புவுடன் துணிந்து மக்கள் விரோத திமுக ஆட்சியின் அவலங்களை, தவறுகளை தொடர்ந்து சுட்டி காட்டவில்லை என்றால் அது தமிழக மக்களுக்கும், தமிழ் அன்னைக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை இனியாவது அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்.

தமிழகத்தின் நடிகர், நடிகைகள் திரைப்படங்களின் மூலம் மக்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்லாமல் மக்களுக்கு பிரச்சினையை ஏற்படும் காலத்தில், பணமும் பொருளும் அள்ளிக் கொடுத்து, பல்வேறு உதவிகளை செய்து, களத்தில் இறங்கி மக்களின் கஷ்டங்களை தீர்த்தது மட்டுமில்லாமல், கடந்த காலங்களில் ஆட்சியாளர் செய்யும் தவறுகளை துணிவுடன் தட்டி கேட்டு, உணர்வுடன் கருத்துக்களை தெரிவித்தனர்.

தற்பொழுது அராஜக திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தவறுகளை, “யார் அவர்?” என்று தமிழகமே பொங்கி எழுந்து கேள்வி கேட்டு போராட்டக் களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் கூட, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல்வன்கொடுமை சம்பவத்தில் கருத்துக்களை தெரிவிக்காமல், களத்தில் இறங்கி போராடாமல் தமிழக நடிகர் நடிகைகள் தற்பொழுது வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்?

முரசொலி எச்சரித்தாலும், திமுக அரசு மிரட்டல் விடுத்தாலும், காவல்துறை அடக்கு முறையை ஏவி விட்டாலும் அனைத்தையும் எதிர்த்து தமிழக மக்களுக்காக, மக்கள் விரோத திமுக அரசின் முகமூடியை கிழிக்கும் விதத்தில், ஆட்சியாளர்களின் தவறுகளையும் கடமை மறந்த காவல்துறையின் செயல்பாடுகளையும் துணிவுடன் தமிழ் இனம் காக்க, அனைத்து நடிகர் நடிகைகள், தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது நம் கடமை என்று உணர்ந்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக அரசும், காவல்துறையும் வீண் விளக்கங்கள் அளித்து பிரச்சனையை திசை திருப்பாமல், தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு, குறிப்பாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் நியாயமான, சட்டபூர்வமான, விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தி குறுகிய காலத்தில் நீதிமன்றத்தில் அதிகபட்ச தண்டனையை விரைவாக பெற்று தருவது மட்டுமே தீர்வு என்பது உணர வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!