பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய எச். ராஜா குற்றவாளி என தீர்ப்பு! அதைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தி வைப்பு..

பெரியார் சிலை உடைப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் திமுக, காங்கிரஸ் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச்.ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையும் முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை வந்தது.

அப்போது ஹெச்.ராஜா தரப்பில், “பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை. எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து. அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி, புகார்தாரர் தரப்பில் எந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே வழக்கின் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14ம் தேதி தள்ளி வைத்த நீதிபதி ஜெயவேல், இந்த இரண்டு வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், ஹெச். ராஜா மீதான புகார் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டது.

எனவே எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என கருதப்படுகிறார் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்தார். மேலும், அவருக்கு 6 மாத கால சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வசதியாக ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஓராண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!