பெண் வழக்கறிஞரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்! பெங்களூருவில் பரபரப்பு..

பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். மேலும், “உங்களது பெயரில் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சல் திரும்பி வந்துள்ளது. அந்த பார்சலில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் உள்ளது. அதுபற்றி மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார். அத்துடன் இதுதொடர்பாக மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் என கூறி மற்றொரு நபர் பேசியுள்ளார். அவர் பெண் வக்கீலிடம் இந்த வழக்கு மிக முக்கியமானது என்பதால், சி.பி.ஐ. மற்றும் சுங்கத்துறை விசாரணைக்கு மாற்றி இருப்பதாக கூறினார். அதன்படி, சி.பி.ஐ. அதிகாரி அபிஷேக் சவுகான் பேசுவதாக கூறி மற்றொரு நபர், பெண் வக்கீலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், பிரபல கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருப்பதால், உங்களிடம் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என கூறியுள்ளார். பின்னர் திடீரென செல்போனில் வீடியோவை ஆன் செய்து வைக்கும்படி கூறிய அந்த நபர், அப்படியே கட்டிலில் படுத்து கொள்ளும்படியும் கூறியுள்ளார். அதன்படியே பெண் வக்கீலும் செய்திருக்கிறார். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி என கூறி மற்றொரு நபர் பெண் வக்கீலை தொடர்பு கொண்டுள்ளார். அவர், நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் கடத்தியது குறித்து பரிசீலிக்க செல்போனில் வீடியோவை ஆன் செய்து நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அந்த பெண் நிர்வாணமாக இருப்பதை வீடியோ எடுத்து கொண்டனர். அதன்பிறகு, நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்கும்படியும் பெண் வக்கீலை அந்த கும்பல் மிரட்ட தொடங்கினர். இதையடுத்து, குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.14.5 லட்சம் வரை மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பெண் வக்கீல் அனுப்பினார். அந்த நபர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியபடி இருந்தனர். அப்போது தான் மும்பை போலீஸ், சி.பி.ஐ, சுங்கத்துறை அதிகாரிகள் என கூறி மர்மநபர்கள் தன்னை மிரட்டி பணம் பறித்தது பெண் வக்கீலுக்கு தெரிந்தது. இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!