குடிநீரை வீணாக்கியதால் அபராதம்.. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்..!
கர்நாடகாவை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பெங்களூர் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடிநீரை வீணாக்கியதற்காக 22 குடும்பங்களுக்கு பெங்களூரு குடிநீர் வாரியம் அபராதம் விதித்துள்ளது. காரை கழுவுவதற்கும் தோட்டத்தை பராமரிப்பதற்கும் சிலர் குடிநீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால், குடிநீரை வீணாக்கியதாகக் கூறி குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீரை சேமிக்கும்படி பெங்களூரு குடிநீர் வாரியம் உத்தரவிட்டது. வாகனங்களை கழுவவும், கட்டுமான பணிகளுக்கும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
“22 வீடுகளில் இருந்து 1.1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக அபராதம் (ரூ. 80,000) வசூலிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
விதிகளை மீண்டும், மீண்டும் மீறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும் போது கூடுதலாக 500 ரூபாய் அபராதம் விதிக்க பெங்களூரு குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. ஹோலி கொண்டாட்டங்களின்போது, காவிரி மற்றும் போர்வெல் தண்ணீரை நடனங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒருமுறை பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியும் பாத்திரங்களில் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், “பெங்களூருவுக்கு நாளொன்றுக்கு 2,600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையால் பெங்களூரு தள்ளாடுகிறது.
பெங்களூருவின் மொத்தத் தேவையில் 1,470 மில்லியன் லிட்டர் தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்தும், 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் பெறப்படுகிறது என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









