அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறி 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர்மீது மட்டும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனா நீதிமன்றத்தை நாடினால், அவரை நாடு கடத்துவோம் என்று வங்கதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், ஷேக் ஹசீனா ஆட்சியில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் வௌியாகி உள்ளது.
இதனால் ஷேக் ஹசினா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதை அடுத்து, அவரை விசாரிக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வங்கதேசத்தின் இடைக்கால அரசு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் திருப்பி ஒப்படைக்கும் முடிவு தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை இந்தியா நீட்டித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வன்முறை காரணமாக, வங்கதேசத்திலிருந்து வெளியேறிய அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் 96 பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ததாக வங்கதேச இடைக்கால அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒருநாளுக்குப் பிறகு, ஷேக் ஹசீனாவின் விசாவை இந்திய அரசு நீட்டித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாவை நீட்டிக்கும் நடவடிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தை உள்ளடக்கியது.
இந்தியா இப்போது ஒரு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. ஷேக் ஹசீனா நீண்டகாலம் இந்தியாவில் தங்கியிருப்பது இருதரப்பு உறவுகளுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றாலும், வங்கதேசத்தின் ஒப்படைப்பு கோரிக்கை நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.
You must be logged in to post a comment.