பல்லாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இருந்த இடம் 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஹிந்துத்துவா அமைப்பினரால் ராமர் பிறந்த இடம் என கூறி இடிக்க முயன்ற போது அச்சமயம் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தடுக்கும் நடவடிக்கை எடுக்காததால், அந்த மசூதி டிசம்பர் 6 1992 அன்று இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆனது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து நிலத்திற்கு பல்வேறு தரப்பில் சொந்தம் கொண்டாடியதால் வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தனது தீர்ப்பை அளித்தது.
அத்தீர்ப்பின் படி நீதிபதிகள் 2:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் அளித்த அந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தை சுன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 13க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நிலம் யாருக்குச் சொந்தம் என்று முடிவெடுக்க வசதியாக உருது, இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் உள்ள பல்வேறு ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரும்படி உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஷியா மத்திய வக்பு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டிக் கொள்ளலாம். பாபர் மசூதியை நியாயமான தூரத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறோம்’ என்று தெரிவித்தது. இதற்கு சுன்னி மத்திய வக்பு வாரியம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ‘பாபர் மசூதி இடத்தில் யாருக்கு உரிமை உண்டு என்ற வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு 1946-ம் ஆண்டு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் தரப்பு கருத்தை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அந்த அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆவணங்கள் அனைத்தையும் உத்தரபிரதேச மாநில அரசு மொழிபெயர்த்து தாக்கல் செய்துவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று (05-12-2017) இஸ்லாமிய சமுதாயம் வஞ்சிக்கபட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான நில உரிமை வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடங்க இருப்பது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை (டிசம்பர் 6) கருப்பு தினமாக அறிவித்து பல சமூக அமைப்புகளும், கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










