இராமநாதபுரம் : தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தில் சேவை செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்கள், புதுச்சேரி உள்பட 39 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தன்னலமற்ற சேவை செய்து வந் தோரை அடையாளம் கண்டு, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து 39 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிழல், பலன் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமை கிராமம் தத்தெடுப்பு உள்ளிட்ட சேவைகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர், சுற்றுச்சூழல் ஆர்வலர் முஹமது சலாவுதீனுக்கு தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி சேவை செம்மல் விருது வழங்கி கவுரவித்தார்.்தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் உடனிருந்தார்.

அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முஹமது சலாவுதீன் கூறுகையில், பணம் கொடுத்தால் அல்லது சிபாரிசு இருந்தால் மட்டுமே விருது வாங்கி விட முடியும் எனும் கலாசாரம் தமிழகத்தில் இன்று பெரிதும் மேலோங்கி உள்ளது. ஒரு படி உயர்த்தி சொல்ல வேண்டுமெனில் இது ஒரு தொழிலாக மாறி விட்டது. பணம் காரணமாக உண்மையான தன்னார்வலர்கள் (அ) சமூக சேவகர்கள் எந்த மேடையிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை பொழிய பசுமையை பாதுகாக்க சுற்றுச்சூழல் பேண எவ்வித எதிர்பார்ப்பு இன்றி சுயநலமின்றி சமூகப் பணி ஆற்றி வரும் என் போன்றோரின் சமூக சேவைகளை அங்கீகரித்து சேவை செம்மல் விருது வழங்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
You must be logged in to post a comment.