செம்பட்டி அருகே, ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என, திங்கள்கிழமை நடைபெற்ற புதிய வகுப்புகள் துவக்க விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு மற்றும் கலை அறிவியில் கல்லூரியில் 2025-26-ம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டிற்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இரா.சுபாஷினி, கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வளர்ச்சி அலுவலரும், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலருமான இரா.கணேசன் வரவேற்று பேசினார்.
விழாவில் குத்து விளக்கு ஏற்றி புதிய வகுப்புகளை துவக்கி வைத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது… தமிழக முதல்வரிடம் நான் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த போது ஆத்தூர் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். தமிழக வரலாற்றிலே கூட்டுறவு துறைக்கு என ஒரு கல்லூரியை கொண்டு வந்தது மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட, ரெட்டியார்சத்திரத்திலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வந்ததால், கிராமப்புற ஏழை மாணவர்களும் உயர்கல்வி கற்கும் நிலைமை உருவாகி உள்ளது.
இக்கல்லூரியில், 1400 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். மாணவியர்களின் நலன் கருதி விரைவில், இக்கல்லூரில் விளையாட்டு மைதானம், விடுதி வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும். கல்லூரி மாணவர்களை நான் அடிக்கடி சந்திப்பேன். கல்விக்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ மாணவிகளுக்காக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய தொகுதிகளில் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. அனுப்பி அனைத்து வசதிகளுடன் தரமாக கட்டப்பட்டு வரும் கல்லூரியின் புதிய கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், 20 நாட்களுக்குள் திறந்து வைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன், ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் (கிழக்கு) முருகேசன் (மேற்கு) ராமன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.