டிசைன் ஒவியப் பள்ளி மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 நிகழ்வில் வியர்வையின் வண்ணங்கள் தலைப்பில் மாபெரும் ஒவியக் கண்காட்சியினை ஆகஸ்ட் 4, 5, 6 தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிரங்கில் நடத்துகிறது.
இந்த கண்காட்சி வியர்வையின் வண்ணங்கள் எனும் கருப்பொருள் தலைப்பில் கடைநிலை உழைப்பாளியின் உன்னதத்தை வெளிக்கொணரும் விதமாக ஓவியக் கண்காட்சியில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. யானைப்பாகன் , பூ வியாபாரி, காய்கறி விற்பவர், பொற்கொல்லர், தப்பாட்ட கலைஞர், ஆட்டோ ஓட்டுனர், மீனவர், ரிக் ஷா ஒட்டுனர், பலூன் விற்பவர், கட்டிட தொழிலாளர்கள், ஆடு மேய்ப்பவர், பால் விற்பனையாளர், பொம்மை தயாரிப்பவர் , வெற்றிலை வியாபாரி, இடுகாட்டு பணியாளர், சுமை தூக்கும் தொழிலாளர், இளநீர் விற்பவர், மின்சார ஊழியர், தென்னை தொழிலாளர், குறி சொல்வோர், கூடை முடைவோர், பஞ்சு மிட்டாய் விற்பவர் என ஓவியங்கள் இடம் பெறுகின்றன. ஓவியங்களுடன் அத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரை கண்காட்சிக்கு அழைத்து வந்து சிறப்பிக்கின்ற நிகழ்வினையும் தமிழகத்தில் முதன் முறையாக செய்கின்றனர். கற்பனைத் திறனில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதில் கதக் கலைஞர், மலர்கள், மலையில் மல்லுக்கட்டும் மான்கள், கடல் கன்னிகள், ஆடுகளும் குட்டிகளும், பறவைகள், பாய்மரக் கப்பல்கள், கண்ணாடி குடுவைகள், கப்பற்படையின் சாகசங்கள், சிக்கு புக்கு ரயில், நங்கூரமிட்ட படகுகள், திருக்கோவில் திருப்பணிகள், தஞ்சாவூர் ஒவியத்தில் விநாயகர், முருகன், கெஜலெட்சுமி என 6 வயது முதல் 10 வயது கொண்ட சிறுவர்கள் சிருஷ்டி கர்த்தாவாகி உருவாக்கிய ஓவியங்கள் காட்சிப்படுகின்றன. ஒவியத்தில் உணர்வுகளை, உடல் மொழிகளை, முக அசைவுகளை தூரிகையில் வெளிக்கொண்டு வந்துள்ளனர் .எளிமையான வாழ்க்கையினை மேற்கொள்பவர்கள் தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும், வடித்த வியர்வைகளையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர். சாமானியரின் உழைப்பு, சிரிப்பு, கருணை என அனைத்தையும் தத்ரூபமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையினை பென்சில் டிராயிங்கிலிருந்து பென் டிராயிங்கிலும், ஆயில் கலரிலிருந்து அக்ரலிக் கலர் வரை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிப்படுத்துகின்றனர்.
இக்கண்காட்சி திறப்பு விழாவில் இருதய சிகிச்சை நிபுணர் செந்தில்குமார், மத்திய மண்டல தபால் துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ பங்கேற்கின்றனர். நிறைவு விழாவில் காவல் துறை துணை ஆணையர் மயில்வாகணன், ஓவியச் சக்ரவர்த்தி ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். டிசைன் ஓவியப் பள்ளி இயக்குனர் நஸ்ரத் பேகம் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்.




You must be logged in to post a comment.