தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 36 ஆயிரம் மதிப்புள்ள 720 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். செங்கோட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்ப விநாயகம் மற்றும் காவலர்கள் கணேசன், உதயசங்கர், ஆகியோர் திருச்சி இருப்பு பாதை மாவட்ட காவல் துறை காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி உட்கோட்ட இருப்பு பாதை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் உத்தரவு படி மது விலக்கு, ரேஷன் அரிசி கடத்தல், லாட்டரி சீட்டு வியாபாரம் சம்பந்தமாக கண்காணித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரயில் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மா தேவி தாலுகா வீரவநல்லூர் கிளாங்குளம் சீனிவாச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் வெங்கடாசலம் (வயது49) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவர் சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்து இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். உடனடியாக அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 36 ஆயிரம் மதிப்புள்ள 720 லாட்டரி சீட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்