அமெரிக்காவில் வாழும் நபரின் வங்கிக்கணக்கில் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் முத்துசுவாமி என்பவரது மகன் ராமச்சந்திரன் சுவாமி. இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம், செங்கோட்டை இலத்தூர் சாலையில் வசித்து வரும் ராயல் நாயுடு என்பவரது மகன் காளிதாஸ் என்பவரின் காரில் சென்று வந்ததால் இருவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ராமச்சந்திரன் சுவாமியிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என காளிதாஸ் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, ராமச்சந்திரன் சுவாமி தனது வங்கிக் கணக்கில் காளிதாஸ் பணம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்தாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோவில் அருகே 6 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை கிரையம் வாங்கியது, கார் மற்றும் ரூ.28 லட்சத்திற்கு 6 செண்ட் நிலம் வாங்கியது, எஸ்டேட் தொழிலாளி களுக்கு ரூ.54 லட்சம் வழங்கியது, ரூ.6 லட்சத்திற்கு துப்பாக்கி வாங்கியது, சோலார் மற்றும் பென்சிங் அமைக்க ரூ.15 லட்சம் என காளிதாஸ் செய்யாத பணிகளுக்கு பணம் செலவு செய்ததாக கணக்கு காட்டியதோடு ராமச்சந்திரன் சுவாமியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 11 லட்சத்து 24 ஆயிரம் பணம் எடுத்தது என்று சுமார் ரூ.3 கோடி வரையில் காளிதாஸ் நம்பிக்கை மோசடி செய்தது ராமச்சந்திரன் சுவாமிக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த ராமச்சந்திரன் சுவாமி காளிதாசை சந்தித்து பணத்தை கேட்ட போது பணம் தர முடியாது எனக் கூறியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் சுவாமி நம்பிக்கை துரோகம் செய்து பண மோசடி செய்த காளிதாஸ் மீது தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பிலிப்ஸ் சுரேஷ் பீட்டர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் காளிமுத்து, அன்னபூரணி ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் இளவரசி மற்றும் திருமலைக் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நம்பிக்கை துரோகம் செய்து ரூபாய் 3 கோடி பண மோசடியில் ஈடுபட்ட காளிதாசை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.