தென்காசி மாவட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சத்யராஜ் (வயது 39). இவர் குத்துக்கல் வலசை பஞ்சாயத்து பகுதியில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. இந்நிலையில் குத்துக்கல் வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரஜினிஷ் பாபு வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். வீடு கட்டுவதற்கான அனுமதி பெற குத்துக்கல் வலசை பஞ்சாயத்து அலுவலகத்தில் நந்தனா விண்ணப்பித்திருந்தார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றால் வீடு கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் 2 சதவீதம் ரூ.46 ஆயிரம் தர வேண்டும் என்று ரஜினிஷ் பாபுவிடம் பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு ரஜினிஷ் பாபு லஞ்சம் தரமுடியாது என கூறியுள்ளார். அப்போது வீடு கட்ட பஞ்சாயத்து அனுமதி தரமாட்டேன் என பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் கூறியுள்ளார். இதனால் ரஜினிஷ் பாபு தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. பால்சுதனிடம் புகார் தெரிவித்துள்ளார்.
டிஎஸ்பி ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.46 ஆயிரத்தை நேற்று ரஜினிஷ்பாபு குத்துக்கல் வலசை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த பஞ்சாயத்து தலைவர் சத்யராஜிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் ரூ.40 ஆயிரம் போதும் என கூறி ரூ.6 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதன், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அலுவலகத்திற்குள் சென்று ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காண்ட்ராக்டர் சவுந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்து லஞ்ச பணம் ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். வீடு கட்ட அனுமதி வழங்க பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் லஞ்சம் பெற்ற சம்பவம் தென்காசி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









