அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் அன்பு சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வித் துறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து வெள்ளி விழா கண்ட கணினி பயிற்றுநர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பழனி அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், பெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பள்ளியின் முன்னாள் மாணவர் ஹரி பிரகாஷ் வரவேற்புரை வழங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ பாரத் தலைமையிலானார்.
சிறப்பு விருந்தினர்களாக – இலுப்ப பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார், அஸ்மிதா சில்க் நாகேந்திரன், ஓய்வுபெற்ற ஆசிரியர் யோகானந்தம், உதவி தலைமையாசிரியர்கள் கண்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி மருத்துவம், பொறியியல், காவல்துறை, கல்வித்துறை, அரசுப்பணி என பல்வேறு துறைகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள், தங்கள் ஆசிரியர் பழனி அவர்களிடம் பயின்ற நாட்களை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
ராம்குமார், பிரகாஷ், சூர்யா, ஸ்ரீபதி உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கண்ணீரோடு நன்றியைத் தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்களும் இணையவழி இணைந்து உரையாற்றி, ஆசிரியரின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி கூறினர்.
பள்ளி ஆசிரியர்கள் கனகராஜ், பால் பாண்டி, சண்முகம், கனகரத்தினம், சரவணகுமார், செல்வகுமாரி மற்றும் பயிற்றுநர் சுரேஷ் ஆகியோர் பாராட்டு உரையாற்றி, பழனியின் உழைப்பையும், மாணவர்களை முன்னேற்றிய அர்ப்பணிப்பையும் எடுத்துக்கூறினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, ஆசிரியர் பழனி மற்றும் அவரது மனைவி சந்தியா பழனி உரையாற்றினர்.
அவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பங்களிப்பு செய்வதாக உறுதியளித்ததுடன் தலைமையாசிரியர் இன் ஆலோசனைப்படி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சி மையத்தை அமைக்கப் போவதாக அறிவித்தனர்.
“என் மீது நம்பிக்கை வைத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கடந்த 25 ஆண்டுகளில் என்னிடம் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி” என்று பழனி உருக்கமாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை மாதவன் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர் மோதிலால் நன்றி கூறியதுடன் விழா நிறைவுற்றது.
சமூகத்தில் ஒலித்த முன்னாள் மாணவர்களின் பாசம் பல ஆண்டுகளாகப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தற்போது பணியாற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய இப்பாராட்டு விழா, சிறுமுகைப் பகுதியில் நெகிழ்ச்சியூட்டும் நினைவாக அமைந்தது.
ஒரு ஆசிரியரின் வாழ்க்கைப் பயணத்தை மாணவர்கள் இவ்வாறு கொண்டாடுவது, கல்வித் துறையின் சமூகப்பண்பையும், மனிதநேயப் பண்பையும் வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக மக்கள் பாராட்டினர்.
You must be logged in to post a comment.