பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் மேலாண்மைச் செயலி (TN SMART APP) அறிமுக விழா

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை உதவிக் குழுவும் இணைந்து பேரிடர் மேலாண்மைச் செயலி TN SMART APP அறிமுக விழா நடைபெற்றது.கலைப்புல முதன்மையர் முனைவர் ச. மகாதேவன் வரவேற்புரையாற்றினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு. அயூப்கான் அறிமுகவுரையாற்றினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் எஸ்.ஹெச். முஹம்மது அமீன் தலைமையுரையாற்றினார்.

பாளையங்கோட்டை வட்டாட்சியர் பி. பாலசுப்பிரமணியன் பேரிடர் மேலாண்மைச் செயலியை வெளியிட்டு அறிமுகவுரையாற்றும்போது…“TN SMART APP எனும் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியின் மூலம் புயல், மழை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கை விவரங்கள், மழை அளவு, அவசர காலச் செய்திகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். வெள்ளம், புயல், மற்றும் பேரிடர் ஏற்படுகிற போது முன்கூட்டியே எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது? எனும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். இச்செயலியை கூகுள் பிளேஸ்டோர் மூலமாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் இச்செயலியில் பதிவுசெய்துகொண்டால் பேரிடர் மேலாண்மை உதவிக்குழுவின் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும்” என்று பேசினார்.

இந்நிகழ்வில் பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர்  ஆர். பாபு, பாளையங்கோட்டை வருவாய் ஆய்வாளர் டி. ராஜ், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். ஜெ. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அ.சே. சேக் சிந்தா நன்றி கூறினார்.விழா முடிவில் இச்செயலி குறித்து மாணவர்களுக்குச் செயல் விளக்கம் தரப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!