அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜனை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் சென்னையின் மாவட்டச் செயலாளராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செல்வாக்காக வலம் வந்தவர் வி.பி. கலைராஜன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் வி.பி.கலைராஜன் டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். இந்நிலையில் சமீப காலமாக கட்சியின் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். கலைராஜனின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருந்ததாக கட்சித்தலைமை கருதியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “கட்சியின் கொள்கைக் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு டிடிவி அறிவித்துள்ளார்.
வி.பி.கலைராஜனுக்கு பதில் வி.சுகுமார் பாபு தென் சென்னை வடக்கு மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு வருமாறு: “தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில், வி. சுகுமார் பாபு இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவர் இதுவரை வகித்துவந்த அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருக்கு கட்சி உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். வி.பி.கலைராஜன் சமீப காலமாக திமுக பக்கம் நெருக்கம் காட்டி வருவதாகவும், ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் எழுந்த தகவலின்பேரில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என அமமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









