நீதிபதி எம். ராஜலட்சுமி பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில், ஞானசேகர் மீதான பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 329 ( விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) குற்றத்துக்காக 3 மாதம் சிறை தண்டனை. 126(2) (செல்ல விடாமல் தடுத்து நிறுத்துதல்) குற்றத்துக்காக 1 மாதம் சிறை தண்டனை, 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்) குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.127(2) – ( உடலில் காயத்தை ஏற்படுத்துதல்) குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை. 75(2) (விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்) குற்றத்துக்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.76 ( கடுமையாக தாக்குதல்) குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.64(1) ( மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல்) குற்றத்துக்காக ஆயுள் தண்டனை. இதில் குறைந்த பட்சம் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்யக்கூடாது. ரூ. 25 ஆயிரம் அபராதம். 351(3) ( கொலை மிரட்டல் விடுத்தல்) குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம். 238(பி) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ) (தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல்) குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம். தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழான குற்றச்சாட்டுக்காக தண்டனை இல்லை. ஏனெனில் பாலியல் குற்றச்சாட்டுக்கான பிரிவில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரிவில் தண்டனை விதிக்கப்படவில்லை. மொத்தம் ரூ. 90 ஆயிரம் அபராதத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்து தவறும்பட்சத்தில் 18 மாதங்கள் அவர் சிறை தண்டனையை அனுபவி்க்க வேண்டும். இந்த தண்டனைகள் அனைத்தையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும், என தீர்ப்பளித்துள்ளார்.மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கென நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இந்த வளாகத்தில் தான் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளது. உலகளவில் தனிப்பட்ட நற்பெயர் உள்ளது. இந்த வளாகத்துக்குள் படிக்கும் மாணவர்களில் 97 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது ஆவணங்களை பார்க்கும் போது தெரிகிறது. பல்வேறு கனவுகளுடன் உரிய கல்வி தகுதியுடன் வந்த மாணவியை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகர், பல்கலைக்கழகம் மட்டும் அல்ல ஓட்டு மொத்த சமூகத்தையும் அவமதிப்பு செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது.
கடந்த 2010 முதல் தற்போது வரை இ்ந்த வழக்கு இல்லாமல் 37 குற்ற வழக்குகள் ஞானசேகர் மீது பதியப்பட்டுள்ளது. இதில் 5 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளது. இதே போன்ற தன்மையுடைய வழக்குகளில் ஏற்கனவே ஞானசேகர் ஈடுபட்டு அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது. எனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.அதேபோல வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகர், சார் என்ற வார்த்தையை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசைதிருப்பவும், மிரட்டவும் பயன்படுத்தியுள்ளார் என்பது அறிவியல்பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கில் அவர் ஒருவர் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது.
அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை கசியவிட்ட காரணத்துக்காக அப்பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த நீதிமன்றமும் அபராதத்தொகை ரூ. 90 ஆயிரத்தை அப்பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. தவிர கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.