இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருத்தேர்வளையில் திறந்தவெளியில் குவிந்து கிடக்கும் கற்குவியலில் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே திருத்தேர்வளையில் சேதமானநிலையில் இருந்த பழமையான சிவன் கோயிலை முழுவதுமாக அகற்றிவிட்டு புதியதாக கோயில் கட்டி வருகின்றனர். அகற்றப்பட்ட கோயில் கற்கள், தூண்கள் கோயிலைச் சுற்றி போடப்பட்டுள்ளன. இதில் கல்வெட்டுகள் எதுவும் உள்ளதா என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலின் தென் பகுதியில் கிடந்த கற்குவியலில் இருந்து பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு துண்டு கல்வெட்டை கண்டுபிடித்து படி எடுத்தனர்.
இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, “கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ள பழைய கோயில் விமானத்தின் அதிட்டானப்பகுதியின் முப்பட்டை குமுதத்தில் இக்கல்வெட்டு இருந்துள்ளது. இதில் மன்னர் பெயர் இல்லை. அவரின் 13வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வூர் திருக்கானபேர்க்கூற்றம் (காளையார்கோவில்) எனும் நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தகவலைச் சொல்லும் கல்வெட்டாக இது உள்ளது.
திருத்தேர்வளை கோயில் இறைவனுக்கு வழங்கப்பட்ட இத்தானத்தை காத்தவன் புண்ணியம் பெறக்கடவான் எனவும், இவர்களின் பாதங்கள் திருத்தேர்வளை இறைவனால் காத்து ரட்சிக்கப்பட வேணும் எனவும், இதுக்கு விரோதம் பண்ணினால் மஹாதோஷத்தில் போவார் எனவும் சொல்கிறது. கல்வெட்டின் இப்பகுதியை ஓம்படைக்கிளவி என்பர். இவ்வூர் அருகில் உள்ள ஆனந்தூர் சிவன் கோயிலில் கி.பி.1323 ஆம் ஆண்டைச் சேர்ந்த சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் கல்வெட்டு உள்ளது. அதே எழுத்தமைதியில் இக்கல்வெட்டும் உள்ளது. எனவே இதுவும் கி.பி.14 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனலாம். ஆனந்தூர் கல்வெட்டில் திருத்தேர்வளையைச் சேர்ந்த வணக்குச் செட்டியார் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகள் பழமையான மன்னர் காலத்து கோயில்களை அகற்றிவிட்டு சிமென்ட் மூலம் புதிய கோயில்கள் கட்டுகின்றனர். சுண்ணாம்பு, செங்கல், கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட இக்கோயில்கள் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றவை. இக்காலத்தில் சிமென்டால் கட்டப்படும் கட்டடங்கள் நூறு ஆண்டுகள் கூட தாங்குவதில்லை. எனவே பழைய கோயில்கள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அதன் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படவேண்டும். திறந்தவெளியில் கிடக்கும் இத்தகைய வரலாற்று சாசனங்களை அரசும், மக்களும் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









