இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தஞ்சை தொல்லியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆனா மூனா சுல்த்தான் அவர்களுடன் இணைந்து பழங்கால கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் உலக வரலாற்று அரங்கில் ஒரு மைல் கல்லாக வரலாற்று ஆசிரியர்களால் இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் சிறப்புடன் ஆட்சி செய்து வந்துள்ளனர்.


இதற்கு முத்தாய்ப்பாக இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தமிழக வரலாற்றில் ஒரு மணிமகுடமாக விளங்கும் பகுதியாகும். இப்பகுதியில் வரலாற்றுச்சிறப்புமிக்க பல கட்டிடங்கள் மற்றும் பல அரியவகை வரலாற்று சான்றுகள் இன்னும் இந்த மாவட்டத்தின் நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகின்றது. இந்த பகுதியை வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர்.


பன்நெடுங்காலங்கள் இந்திய நாட்டை அன்னிய மன்னர்கள் ஆட்சி செய்த போதிலும் கூட மதுரையில் இருந்து இராமநாதபுரம் வரை பாண்டிய பேரரசர்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த மண்ணாக இப்பகுதி விளங்கியது. இந்த தகவலை பறைசாற்றும் எண்ணற்ற கல்வெட்டுகளும், செம்பு பட்டயங்களும் இப்பகுதியில் நிறைந்து இருக்கிறது.

மன்னர்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஆங்கில ஏகாதிபத்திய பிரபுகளால் இந்தியாவின் சரித்திரங்கள் மறைக்கப்பட்டது போல் இப்பகுதி உண்மை சரித்திரங்களும் மறைக்கப்பட்டது. இப்பகுதியின் உண்மை சரித்திரத்தை உலகுக்கு பறைசாற்ற பல தொல்பொருள் ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதிளில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க சான்றுகள், கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தஞ்சாவூர் தஞ்சை தொல்லியல் கழகத்தின் செயலாளர், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் முதுகலைத் துறை முனைவர் சு.இராசவேலு, தஞ்சை தொல்லியல் கழகத்தின் பதிப்புக்குழு உறுப்பினர் முனைவர் ந.அதியமான் ஆகியோர் கீழக்கரை வந்தனர்.


இவர்கள் முதலாவதாக கீழக்கரையை அடுத்த ஏர்வாடி அருகாமையில் இருக்கும் இதம்பாடல் கிராமத்திற்கு சென்று அங்கு இருக்கும் கல்வெட்டுகளையும், சிதிலமடைந்து காணப்படும் அக்கால கட்டிடங்களையும் ஆய்வு செய்தனர். இவர்களுடன் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா சுல்த்தான், கீழக்கரை வரலாற்று ஆர்வலர்கள் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், வழக்குரைஞர் சட்டப் போராளி முகம்மது சாலிஹ் ஹூசைன் ஆகியோர் உடன் சென்றனர்.


கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா.சுல்தான் அவர்கள் கூறுகையில் ”இப்பகுதிகளில் பல வரலாற்று சான்றுகள் மறைக்கப்பட்டு பல தவறான தகவல்கள் பொதுமக்கள் கவனத்திற்கு புத்தக வடிவில் எழுதப்பட்டுள்ளது. உண்மையான வரலாற்று சான்றுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான ஆயத்தபணிகளாக கல்வெட்டுகளையும், சான்றுகளையும் முறையாக ஆய்வு செய்து பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருவோம்” என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












