ஆதரவற்ற மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்கள்.. 

ஆதரவற்ற நிலையில் இறந்த மகமாயி பாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்களை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பசியில்லா தமிழகம் மூலமாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்களுக்கான கட்டணமில்லாத இல்லம், அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு இல்லத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆதரவற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த இல்லத்தில் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

 

இங்கு, கடந்த 11.6.2024 அன்று தென்காசி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மூலமாக, செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் அனுமதியுடன் மகமாயி என்ற பாட்டி மிகவும் உடல் நிலை மோசமான நிலைமையில் அனுமதிக்கப்பட்டார். அன்பு இல்லத்தில் முதலுதவிகள் செய்து தொடர்ந்து 8 மாதமாக அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அன்பு இல்லத்தைச் சார்ந்த நிர்வாகிகள் ஏற்படுத்தி கொடுத்தனர்.

 

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், வயது முதிர்வின் காரணத்தினாலும் மகமாயி பாட்டி இறைவனடி சேர்ந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று, அவரது உறவினர்களை வரவழைத்து அவரது உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகமாயி பாட்டிக்கு அன்பு இல்லத்தில் அனைத்து இறுதிச் சடங்குகளும் முடித்து புத்தாடை அணிவித்து, முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரும் இணைந்து மௌன அஞ்சலி செலுத்தி, மாலை மரியாதையுடன் அவரது உடல் தென்காசி மின் மயானத்தில் அவரது உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

 

இஸ்லாமிய பெண்களால் நடத்தப்படும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் ஜாதி மத பேதமின்றி அனைத்து ஆதரவற்ற வயது முதிர்ந்த பெண்களும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மகமாயி பாட்டியின் உறவினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் நடு இரவு வரை மின் மயானத்தில் நின்று செய்து கொடுத்த ஜமீமா ஜின்னா மற்றும் செய்யது அலி பாத்திமா ஆகியோருக்கு இறந்த மகமாயி பாட்டியின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி விடை பெற்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த தென்காசி மாவட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் இஸ்லாமிய பெண்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!