நவீன இயந்திரங்கள் குவிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் சாணை தீட்டும் தொழிலை செய்து தள்ளாத வயதில் முதியவர் ஒருவர் வாழ்வாதாரம் நகர்த்தி வருகிறார்.
‘கத்தியை தீட்டாதே… உந்தன் புத்தியை தீட்டு’ என்ற பாடலை அறியாதோர் இருக்க முடியாது. அதே போல, தீட்டுதல் என்றவுடன், சாணை பிடிக்கும் கருவியும்,அதை சுமந்து திரியும் தொழிலாளியும் ஞாபகத்துக்கு வராமல் இருக்க முடியாது.நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில், எல்லாமே, ‘யூஸ் அண்ட் த்ரோ’ ஆகி விட்ட நிலையில்,இந்தக் காலத்தில் இத்தொழிலுக்கு மவுசு உள்ளதா எனக்கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், காய்கறிகளை அரிவாள்மனையைவிட கத்தியால் நறுக்கினால் வேகமாக நறுக்க முடியும் என்பதால், இன்று அரிவாள்மனைகளைப் பலரும் பயன்படுத்துவதில்லை. கத்தி மழுங்கினால், புதிய கத்திகளை வாங்குகிறார்கள்.உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் அரிவாள்மனை, கத்தியை மட்டும் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சாணை தீட்டுகிறார்கள். அதனால் இதன் மூலம் அவ்வளவு பெரிய வருமானம் இந்த தொழிலில் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ‘தொண்டி’ கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவர் சைக்கிளை நிறுத்தி வைத்தபடி அதை மிதித்து சுழற்றிக் கொண்டிருந்தார். அதனருகில் சென்று பார்த்தபோது, அவர் பழைய சைக்கிளை ‘சாணை’ பிடிக்கும் எந்திர வடிவில் அமைத்து, அதில் சாணை பிடிக்கும் கல் பொருத்தப்பட்டு சைக்கிளை சுழற்றுவதன் மூலம் அரிவாள் மனை, கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை சாணை தீட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக பழைய சைக்கிளை வடிவமைத்து பொருட்களுக்கு சாணை பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் பேச்சுக்கொடுத்ததில்,அவர், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பெயர் மாசி, 60 வயது முதிவயர் என தெரிய வந்தது. மேலும், சாணை பிடிப்பது மட்டுமின்றி
இவரே நல்ல தரமாக தயார் செய்து விற்கும் ஒரு அரிவாள்மனை 400, 500 ரூபாய் வரை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
வயது தளர்ந்தாலும் உழைக்கத் தயங்காத அவருக்கு, அரசு சலுகை பற்றி துளி கூட தெரியவில்லை என்பது அவரிடம் பேசியதில் நாம் தெரிந்து கொண்டோம். அழிந்து வரும் தொழிலை தொடர்ந்து செய்து வரும் இவர் போன்ற அன்றாட கூலி தொழிலாளிகளுக்கு அரசு சலுகைகள் வழங்கினால், கத்தியைத் தீட்டிப் பளபளப்பாகவும் கூர்மையாகவும் மாற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரமும் அதேபோல் பளபளப்பாக மாறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
You must be logged in to post a comment.