முன்னுரை:-
அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள்
தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு” என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
கடந்த வார தொடர்ச்சி….பாகம் – 3
இவ்வளவு தாக்குதல்களையும் சோதனைகளையும் சந்தித்த பின்னரும் அந்த மக்களின் மனோநிலை எவ்வாறு உள்ளது? அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
அங்குள்ள பல குடியிருப்பு வளாகங்களுக்கு, வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. வீடுதோறும் பலரை இந்த போரில், இஸ்ரேலின் தாக்குதலில் பலி கொடுத்துள்ளார்கள். அனைவரின் வீட்டிலும் இறந்த தியாகிகளின் படங்கள் வரிசையாக உள்ளன, அவர்களின் வீட்டின் மீது குண்டு விழுந்து சேதமடைந்த பகுதி என அவர்கள் இவைகளை எல்லாம் மிகுந்த பெருமிதத்துடன் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பல முறை விழுந்ததை ஒரு விருது பெற்ற
உணர்வுடன் தான் அவர்கள் விவரிக்கிறார்கள். பொதுவாக காசாவில் உள்ள மக்கள் தங்களை இந்த உலகம் கைவிட்டது போல் உணருகிறார்கள். பாலஸ்தீனத்துடன்
நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு வருத்தமே. இருப்பினும் காசாவின் ஒரு அங்குலத்தை கூட இனி விட்டு கொடுக்க இயலாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். எங்களுக்கு நிவாரணங்களை விட உங்கள் ஆதரவு தான் பெரியது என்று பல பெரியவர்கள் எங்கள் கைகளை பற்றி கூறிய வார்த்தைகள் அவர்களின் அரசியல் தெளிவை, மன திடத்தை காட்டியது. ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில் அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா – இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன் போரிடுவதை பார்க்கும் போதும் நம் நாட்டில் உள்ள நிலையை யோசிக்கவே வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு இழக்க இனி எதுவும் இல்லை, நம்மிடம் இழக்க இன்னும் ஏராளமாக உள்ளது.
பாலஸ்தீன முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் அரசியல் சமூக வாழ்கைத் தரம் எவ்வாறு உள்ளது? மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அவர்களுக்குத் தடையின்றி கிடைக்கிறதா? தொழில் அல்லது வருமானத்திற்கு என்ன செய்கிறார்கள்?? அம்மக்கள் சந்திக்கும் சமூக அவலங்கள் என்னென்ன??
அங்கு உள்ள பள்ளிவாசல்கள் அடிக்கடி ஏவுகணைகளின் இலக்காக உள்ளது, நான் சென்ற பல பள்ளிவாசல்களில் கட்டிட வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் ஏழைகள், கொஞ்சம் வசதி படைத்தோர், பணக்காரர்கள் எனும் வித்தியாசத்தை காண முடிந்தது. வீடுகளில் வசிப்பவர்கள், முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என பல
தரப்பினரும் உள்ளனர். கைத் தொழில் செய்பவர்கள், சிறிய மூலதனத்தில் தொழில் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சிறு பாத்திகளில் விவசாயம் செய்பவர்கள், குண்டுகள் விழுந்து நொருங்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை எல்லை பகுதிக்கு எடுத்து வந்து மீண்டும் அதனை கட்டிடம் கட்டும் கச்சா பொருளாக மாற்றுவது என பலதரப்பட்ட தொழில்கள் அங்கு உள்ளன. இருப்பினும் மிக விசித்திரமானது அங்கு உள்ள ரஃபாவின் இருபுறங்களில் உள்ள வியாபாரிகள் ஆயிரக்கணக்கான சுரங்கள் அமைத்து அதில் தான் எல்லா பொருட்களையும் இங்கு எடுத்துவருகிறார்கள். எகிப்து ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள் காசாவுக்கு வரும் பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது. சுரங்கம் வெட்டுதல் அங்கு ஒரு மிக பெரும் தொழிலாகவே உள்ளது. இந்த சுரங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடப்பது மிகவும் சகஜமானது.
மின்சாரம் தான் பெரும் தட்டுப்பாடானது, மின்சாரத்தை மிகவும் கவனமாகவே செலவிடுகிறார்கள். பல மணி நேரம் மின் வெட்டு அங்குள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள் காசாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேல், எகிப்து ஆகிய இரு நாடுகளில் இருந்து தான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்ணையும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதில் இருந்தும் அங்கு ஏராளமான குழுக்கள் நிவாரண உதவிகள் கொடுத்து வந்தாலும் , அங்கு யாரும் கட்டுமான பொருட்களை, மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களை எடுத்து செல்ல தடையுள்ளது. நாங்கள் வாங்கிய 4 பெரும் சோலார் ஜனரேட்டர்களை கூட சிரியாவிலேயே அந்த கப்பலில் ஏற்ற மறுத்து விட்டார்கள்.
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள பள்ளிக்கூடங்களும் மருத்தவமனைகளும் பெரிய அளவில் சிதைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் அம்மக்களுக்கு எதேனும் உதவி கிடைத்து வருகிறதா??
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை பல முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு கட்டிடம் தான் அவர்களின் முதன்மை இலக்கு, மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்தது இல்லை. ஏராளமான நோயாளிகள் படுக்கை வசதிகள் இல்லாததால் வீட்டுக்கு
அனுப்பி வைக்க படுகிறார்கள். அறுவைசிகிச்சை செய்யபட வேண்டிய பலர் மருந்துகளும், கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து மடிகிறார்கள். பல உயிர் காக்கும் மருந்துகள் தொடர்ந்து இல்லை அல்லது பற்றாக்குறையாகவே உள்ளது. ஆனால் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் ராணுவ வீரர்களை போல் பணியாற்றுகிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் இன்னும் கொஞ்சம் காலம் நிம்மதியாக வாழ்ந்து மடிவார்கள்.
அரசியலில் காசா மக்கள் ஆதரவு யாருக்கு??
ஹமாஸ் தான் அங்கு மக்களின் பெரும் ஆதரவை பெற்ற அமைப்பாக உள்ளது. அவர்கள் காசாவின் நிர்வாகத்தை திறம்பட நடத்துகிறார்கள். பத்ஹ் மேற்குகரையில் ஆட்சியில் உள்ள போதும் கொள்கை ரீதியாக மிகவும் நீர்த்துவிட்டார்கள். பத்ஹ் மேற்குகரையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸின் பல தலைவர்களை சிறைவைத்துள்ளது. இந்த இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பிளவு இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது..
பயணம் இன்னும் தொடரும்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









