பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891ல் மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ‘சுபேதார் மேஜர்’ என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது. 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது.
மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார். படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக ‘லெப்டினன்ட்’ பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915ல் ‘பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் ‘பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். ‘ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை” தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24, 1932ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான ‘இந்து சட்டத் தொகுப்பு மசோதா’விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952ல் அந்த சட்டம் நிறைவேறியது.
தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் ஆவார். அம்பேத்கரின் பொன்மொழிகள், “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.” “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல, ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.” “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம்–அறிவு, இரண்டாவது தெய்வம்–சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்–நன்னடத்தை”. “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.” “வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டிசம்பர் 6,1956ல் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









