கோவில்பட்டியில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்..

கோவில்பட்டியில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி காவல்துறை துணை காணிப்பாளர் எம்.ஜெபராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் சுதேசன், ஐயப்பன், பத்மாவதி மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திமுக, அதிமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை பொதுச் சுவர் மற்றும் தனியார் சுவர்களில் வரையக்கூடாது. ஊரகப் பகுதிகளில் தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெற்று தனியார் சுவர்களில் மட்டும் தேர்தல் சின்னங்களை வரைந்து கொள்ளலாம்.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்து வருவதால் பொது இடங்களில் உள்ள கொடி, கொடி கம்பம், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் கொடி பீடத்தில் உள்ள சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களின் உருவப் படங்கள் ஆகியவற்றை 48 மணி நேரத்திலும், தனியார் இடங்களில் உள்ளவற்றை 72 மணி நேரத்திலும் அகற்ற வேண்டும்.

தேர்தலை முன்னிட்டு கட்சி அலுவலகம் திறக்க தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு உட்பட்டு திறக்க வேண்டும். அவ்வாறு தேர்தல் அலுவலகம் அமைக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய கீற்றுக் கொட்டகை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது. சமூக  ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது.

வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தொடர்பான பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுக்க கூடாது. வாகனங்களில் செல்லும்போது ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களையோ, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணமோ எடுத்துச் செல்லக் கூடாது.

காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வழித்தடங்களில் தான் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும். பொதுக்கூட்டம், பிரச்சாரம் ஆகியவற்றிற்கு உரிய முன் அனுமதி பெற்றபின் தான் நடத்த வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தினர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!