அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை அறிவிப்பு செய்தது காங்கிரஸ் கட்சி..

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 25 முதல் மே 30 ஆம் தேதிவரையில் நாடுதழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசியதாவது, அரசியலமைப்பைக் காப்பாற்றும் போராட்டம் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையில் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மே 3 முதல் மே 10 வரையில் மாவட்ட அளவிலும், மே 11 முதல் மே 17 வரையில் நாடு முழுவதும் 4,500 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். தொடர்ந்து, மே 20 முதல் மே 30 வரையில் வீட்டுக்குவீடு பிரசாரமும் நடத்தப்படும்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகத்தை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது, அரசியல் பழிவாங்கும் வழக்கே. மேலும், இது ஒரு சட்டரீதியிலான பிரச்னை அல்ல; இது, ஓர் அரசியல் துன்புறுத்தல், அச்சத்தைத் தூண்டும் அரசியல் பிரச்னை.

நேஷனல் ஹெரால்டு பற்றிய பாஜகவின் தவறான தகவலை எதிர்கொள்ளும்வகையில், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கவனம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியின் மீதுதான் இருக்கும். நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு, தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரச்னை, இடஒதுக்கீட்டின் மீதான 50 சதவிகித உச்சவரம்பை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி முதலான கட்சியின் கோரிக்கைகளும் இன்றைய கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவிகித பங்குகள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2014-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து, கடந்த 2021-இல் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் சொத்துகளை கடந்த 2023, நவம்பரில் இணைத்தது.

இந்த நிலையில், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில், தற்போது சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!