இராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., கட்சியின் சார்பில் கூட்டுறவு தேர்தலில் போட்டியிடுவது குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில் தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும் கட்சியின் கழக அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் பேசியதாவது, அ.தி.மு.க. என்பது பெரிய இயக்கம். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் வளர்க்கப்பட்ட பெரிய இயக்கம். அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டன் வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டான். எத்தனை தினகரன் வந்தாலும் கட்சியையும், தொண்டர்களையும் எதுவும் செய்ய முடியாது. அ.தி.மு.க.,வை வெல்ல யாரும் பிறக்கவில்லை. இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் கட்சி வேட்டி கட்டுவதை பெருமையாக கருதி கம்பீரமாக உட்கார்ந்துள்ளனர். இந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வரலாம். தொண்டர்கள்தான் முக்கியம். அ.தி.மு.க. ஆரம்பித்த காலத்தில் இருந்து மாற்று என்றால் நாங்கள் தி.மு.க.வைத்தான் பார்க்கிறோம். தொண்டர்களை வைத்துதான் கட்சி உள்ளது. இங்கு சீனியாரிட்டியை பார்ப்பது கிடையாது. தமிழகத்தில்தற்போது சிறந்த முறையில் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல் பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களுக்குள் சீனியாரிட்டி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. அதனால்தான் மக்கள் போற்றும் சிறந்த ஆட்சியை நடத்தி வருகின்றனர். சிலர் தேவையில்லாமல் மத்திய அரசின் அடிமை என தவறாக பேசி வருகின்றனர். மத்திய அரசுடன் அனுசரித்து போவதால் பல நல்ல திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கிறது. இதன்முலம் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் மத்திய அரசின் அடிமை என தவறாக சித்தரித்து வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை தொண்டர்கள் காட்டிகொள்ள வேண்டும். சிலர் பணத்தை வைத்து எதையும் செய்யலாம் என நினைக்கின்றனர். அந்த வேலை நடக்காது. வரும் உள்ளாட்சி தேர்தலோடு டிடிவி கட்சி காணாமல் போய்விடும். சிலர் தேவையில்லாமல் அ.தி.மு.க. தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த இரு அணி என தெரிவிக்கின்றனர். நான் உறுதிபட தெரிவிக்கிறேன் அ.தி.மு.க. என்பது ஒரே அணிதான். நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாகுபாடின்றி கட்சி பணியாற்றி வரும் கக்ஷட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க., ஒட்டுமொத்தமாக வெற்றி பெற பாடுபட வேண்டும். இதன்முலம் டிடிவி கட்சி இல்லாமல் போய்விடும் என்றார்.
அதைத்தொடர்ந்து அக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சரும் மருத்துவ அணி மாநில செயலாளருமான டாக்டர் மணிகண்டன் பேசும்போது, கட்சிக்கு சொந்தமான நாம்தான் கட்சி வேட்டி கட்ட வேண்டும் என நான் தெரிவித்தது தற்போது தமிழகம் முழுவதும் ஒலிக்கிறது. சிலர் பணத்தை கொடுப்பது போல் கொடுத்து உங்கள் அமைச்சர் வந்துவிடுவார் என தவறாக பேசி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். 40 ஆண்டு கால சரித்திரத்தில் இல்லாத வகையில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க வைகையில் தண்ணீர் கொண்டு வந்து ஊரணிகள், கண்மாய்கள் நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் உயர செய்துள்ளேன். என்னிடம் உதவி என யார் தேடிவந்தாலும் நேரங்காலம் பார்க்காமல் உதவி செய்து வருகிறேன். நம் மாவட்டத்திற்கு தேவையான அனைத்தையும் முதல்வரிடம் கோரிக்கையாக வைத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். சட்டக்கல்லூரி, மருத்துவமனையில் தரம் உயர்த்தல் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. நான் ராமநாதபுரம் சட்டசபை தொகுதிக்கு மட்டும் எம்எல்ஏ வாக இல்லாமல் திருவாடானை, பரமக்குடி சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து அந்த தொகுதி மக்களையும் அடிக்கடி நேரில் சந்தித்து தேவையான உதவிகளை செய்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். சிலர் நான் மக்களுக்கு ஆற்றும் சேவையை பொறுத்து கொள்ளாமல் தேவையற்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர். நான் இதுவரை 10 பைசா லஞ்சம் வாங்காமல் நிதி முழுவதையும் மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்ளேன். எனக்கு மக்கள் பணிதான் முக்கியம். கட்சிக்காக நானும் எனது குடும்பத்தினரும் எந்தளவு உதவியையும் செய்ய தயாராக உள்ளோம். வரும் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இதற்காக உங்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் வேண்டுமானாலும் என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு கேளுங்கள் நான் உதவ தயாராக உள்ளேன். குறிப்பாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நம்கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வெற்றிகனியை எட்ட வேண்டும். இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், விவசாய அணி மாவட்ட செயலாளர் வீரபத்திரன், காட்டுரணி தொடக்க வேளாண்மை வங்கி இயக்குனர் சாத்தையா, மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர்கள் ஆரிப்ராஜா, வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












