தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள கடையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையத்தை 13.07.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து விவசாயிகளுக்கு கால்நடை தீவன விற்பனையை தொடங்கி வைத்தார்.



தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் தயாரிப்புகளான தென்றல் தூய தேங்காய் எண்ணெய் மற்றும் அகில் சிப்ஸ் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கடையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பார்வையிட்டு 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 6 இலட்சம், 7 உறுப்பினர்களுக்கு ரூ.8.8 இலட்சம் பயிர் கடன்கள், 30 உறுப்பினர்களுக்கு ரூ.19.74 இலட்சம் கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 77 உறுப்பினர்களுக்கு ரூ.40 இலட்சம் அளவில் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெரும் வகையில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கடன், மாற்றுத் திறனாளி கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன், நகைக் கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் நடத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்களில் 20% சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மின்னணு சேவைகளை வழங்கும் 80 பொது சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் தென்காசி மேலகரம் பாரதி நகரில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பொதிகை சூப்பர் மார்க்கெட் ஆகியவை திறக்கப்பட்டு தனியார் கடைகளை விட குறைந்த விலையில் வீட்டு உபயோகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் சிறப்பினமாக தமிழ்நாடு கூட்டுறவு துறையின் தனித்துவ தயாரிப்புகளான சமையல் மசாலா, செக்கு எண்ணெய், கொல்லிமலை காபி தூள் விற்பனை செய்யப்படுகின்றன. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத் துறை விடுதிகள். திருக்கோவில் அன்னதான திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட அம்மா உணவகங்களுக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வெளி சந்தையினை விட குறைந்த வாடகைக்கு பெற்று பயன் பெறும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல் சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், இயந்திர கலப்பைகள், டிரெய்லர்கள், மருந்து தெளிப்பான்கள், தேங்காய் உரிக்கும் கருவிகள் உட்பட 182 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளன. இவற்றை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது coop இ வாடகை உழவன் செயலியின் மூலம் முன் பதிவு செய்தும் வாடகைக்கு பெற்று பயன் பெறலாம். எனவே, பொது மக்களும், விவசாய பெருமக்களும் கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை முழு அளவில் பெற்று பயனடைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வி.பா.பூர்விசா, கூட்டுறவு சார்பதிவாளர் உமாமகேஸ்வரி, கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செல்லம்மாள், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி ரா.ராமசுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் சங்கப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.