இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக் கோரி தென்காசியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ – பைலிங் முறையை நடைமுறை படுத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர்.மாடக்கண் ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோட்டை சாமி, ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆலடி மானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கரூர் நா.மாரப்பன் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கரூர் மாரப்பன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நீதிமன்றங்களில் இ ஃபைலிங் முறையை உடனடியாக வாபஸ் பெற கோரி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் உயர் நீதிமன்றம் இ-பைலிங் முறையை வாபஸ் பெறவில்லை. உடனடியாக அதனை முற்றிலும் வாபஸ் பெறாவிட்டால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது. இதுவரை நாம் ஆர்ப்பாட்டம் மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட அறப்போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதனைத் தொடர்ந்து வரும் 19.12.2025 அன்று சென்னை உயர் நீதிமன்றம் முன்பு பல்லாயிரக் கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இ – ஃபைலிங் முறையை உடனடியாக முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு மேலும் உயர் நீதிமன்றம் தாமதித்தால் வரும் 19 ஆம் தேதி என்று சென்னையில் உயர்நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அதன் பின்பு நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் குறித்து நமது சங்கத்தின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவிப்பார்கள். அதன்படி அனைத்து வழக்கறிஞர்களும் போராட்ட களத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

 

தமிழகத்தில் குறிப்பாக தென்காசியில் ஒரு அரசு வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அது போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நடந்து விடக்கூடாது அதற்கு முன்பாக ஒன்றிய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  முன்னதாக தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமார சாமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறினோம். அப்போது கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமார சாமியின் மனைவி தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததாக கூறினார்கள். ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 

மனித சங்கிலி போராட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் மஜீத், சுப்பிரமணியன், ஜெகதீசன், குமார் பாண்டியன், நிஷாந்த் கண்ணன், ஜோன்ஸ், மாடசாமி பாண்டியன்,, சைலபதி, சு.வேலுச்சாமி, முருகன், சின்னத் துரை பாண்டியன், தங்கதுரை, மூர்த்தி, முன்னாள் தலைவர் செல்லத்துரை பாண்டியன், பிச்சி ராஜ், கோபால கிருஷ்ணன், பூசைத்துரை, ஆக்ஸ்போர்டு திருமலை, அருண், ஜெபா, ஆறுமுகம் என்ற கண்ணன், செல்வகுமார், தாஹிரா பேகம், சங்கர சுப்பிரமணியன், சண்முகவேலு மற்றும் தென்காசி செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் ஆர். மாடக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!