அதிமுகவுக்கு இபிஎஸ் துரோகம் இழைத்து விட்டதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, பாஜகவுடன் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டதாக அதிமுக கூறியபோதிலும், இரு கட்சிகளும் தொடர்பிலேயே இருந்துள்ளனர். தற்போது வெளிப்படையாக கூட்டணியை அறிவித்து விட்டனர். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து விமர்சித்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
கல்வி நிதி, வக்ஃப் சட்டம், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிய அதிமுக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றியவர்களுடன் அவர் அமர்ந்துள்ளார்.
மேடையில் பேசக்கூட எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி வழங்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவுக்கு இபிஎஸ் துரோகம் செய்து விட்டார். பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவர்.
தமிழுக்காக பாஜக அரசு என்ன செய்து விட்டது? தமிழை வளர்ப்பதாக சொல்லும் இவர்கள்தான், தமிழுக்காக ரூ. 100 கோடிகூட ஒதுக்கவில்லை. திருக்குறளை பிரதமர், அமைச்சர்கள் சுட்டிக்காட்டி பேசுவதை வைத்து, அவர்கள் தமிழை வளர்ப்பதாகக் கருத முடியாது. மத்திய அரசை விமர்சிப்பவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனையை நடத்துகிறது என்று தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து அறிவிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வியாழக்கிழமை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை அறிவித்தார்.
மேலும், அதிமுகவுடன் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், யார்யாருக்கு எவ்வளவு தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், ஆட்சியமைப்பது குறித்து தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
You must be logged in to post a comment.