திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா சித்தரேவு கிராமத்தில் ஆதார் இல்லாத ஒரே காரணத்திற்க்காக அய்யம்பாளையம் SBI வங்கி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கு தமிழக அரசு வழங்கிய உதவித்தொகை பணத்தை பிடித்துவைத்து கொண்டதையும், அதையொட்டி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தலையிட்டதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகளின் கடுமையான முயற்சியின் பலனாக சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் உதவித்தொகை பணம் திருப்பி தரப்பட்டது.
இந்த பிரச்சனையின் சூடு அடங்குவதற்குள் மீண்டும் ஆதாரை காரணம் காட்டி வேடசந்தூர் IOB வங்கி வடமதுரையை சேர்ந்த கடுமையான மனவளர்ச்சி குன்றிய நித்யா என்னும் மாற்றுத்திறனாளிக்கு தமிழக அரசால் வழங்கிய உதவித்தொகை 15,000 ரூபாயை பிடித்து வைத்துக்கொண்டு நித்யாவின் ஆதார் கார்டு நகல் கொடுத்தால்தான் பணத்தை தருவோம். இல்லையென்றால் பணத்தை தர மாட்டோம் என சொல்லி பணம் தர மறுக்கிறார்கள். உச்சநீதிமன்றம் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என பலமுறை தீர்ப்பளித்தும், வருவாய் நிர்வாக ஆணையர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டும் இன்னும் எந்த வங்கியிலும் ஆதார் கட்டாயமில்லை என்கிற நடைமுறை பின்பற்றப்படவில்லை.
உடல் நன்றாக இருப்பவர்களால் ஆதார் எடுப்பது சுலபம். ஆனால், மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு எப்படி முயற்சித்தாலும் ஆதார் எடுக்க இயலாது. இதைக்கூட புரிந்துகொள்ளாத வங்கி நிர்வாகங்கள் குறைந்தபட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாவது ஆதாரில் இருந்து விலக்களிக்காமல் ஆதாரை கட்டாயப்படுத்துவது என்பது ஏற்க முடியாதது. தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் விசயத்தில் வங்கிகளின் கெடுபிடி தொடருமேயானால் கடுமையான போராட்டத்தை அனைத்து வங்கிகளின் முன்பாகவும் நடத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு வேடசந்தூர் IOB வங்கியால் பிடித்துவைத்திருக்கும் பணம் முழுவதையும் தருவதற்கும், இதுபோன்ற பிரச்சனைகள் இனிமேல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் செல்வநாயகம் மற்றும் செயலாளர் பகத்சிங் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஔ
கீழை நியூஸுக்காக..
திண்டுக்கல் மாவட்டம் அழகர்சாமி


You must be logged in to post a comment.