சீனப் பிரதமருக்கு என்ன தேவைப்பட்டால் ஐ.நா சபை தலைவருக்கும் கடிதம் எழுதுவார் கமல் ஹாசன்: நடிகை காயத்ரி ரகுராமிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் பதிலடி..
நேற்று பாரதப் பிரதமருக்கு எங்களது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எழுதிய கடிதம் குறித்து “சீனப் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே…?” என விமர்சனம் செய்யும் காயத்ரி ரகுராம் அவர்களே நீங்களும் பால்கனி அரசியல் செய்யும் மேல் தட்டு வர்க்கம் என்பதை நாங்கள் நன்கறிவோம்.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பார்த்து “சேரி பிஹேவியர்” என்று விமர்சனம் செய்த உங்களுக்கு ஏழை, எளிய மக்களின் இன்றைய நிலை குறித்தோ அல்லது 144தடை உத்தரவால் வேலையின்றி, வாழ்வாதாரமின்றி அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வோம் என தினம், தினம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களின் மனநிலை குறித்தோ, இன்னல்களும், வேதனைகளும் நிறைந்த அவர்களின் அடித்தட்டு வாழ்க்கை குறித்தோ குளிர்சாதன அறைகளில் ராஜ வாழ்க்கை வாழும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
மத்திய அரசும், பாரதப் பிரதமரும் என்ன சொன்னாலும் கைகட்டி, வாய் பொத்தி “சொல்லுங்க எஜமான்” என கூழைக் கும்பிடு போட நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் ஓபிஎஸ்ஸோ, ஈபிஎஸ்ஸோ அல்ல. அதே நேரத்தில் நல்லது செய்தால் பாராட்டாமலும், தவறு நடந்தால் தட்டிக் கேட்காமலும் எதிரிக் கட்சியாக நடந்து கொள்ள “மக்கள் நீதி மய்யம்” ஒன்றும் தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியும் அல்ல.
ஏழை, எளிய மக்களின் மனநிலையை, உழைக்கும் தொழிலாளர்கள் வர்க்கத்தின் இன்னல்களை நன்கு உணர்ந்தவர் எங்களது தலைவர் என்பதால் தான் அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். அவருடைய குரல் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின், உழைக்கும் வர்க்கத்தினரின் மனச்சாட்சியாக இன்று உலகெங்கும் எதிரொலிப்பதை உங்களைப் போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஊடகங்கள் உங்களைப் பற்றி பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக இன்று நம்மவர் குறித்து விமர்சனம் செய்யும் உங்களுக்கு பதில் சொல்லக் கூடாது தான் என்றாலும் சரியான நேரத்தில் பதில் சொல்லாமல் கடந்து போனால் உங்களைப் போன்ற அயிரை மீன்களெல்லாம் நம்மவர் என்கிற திமிங்கலம் முன் எள்ளி நகையாடும் என்பதாலேயே இந்த பதில் அறிக்கை.
நீங்கள் சொல்வது போன்று சீனப் பிரதமருக்கு மட்டுமல்ல, ஐ.நா சபை தலைவருக்கும் கடிதம் எழுதுவார். தேவைப்பட்டால் ஐ.நா.சபைக்கே நேரிடையாக சென்று முறையிடுவார்.
எனவே பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதிய எங்களது தலைவரை பற்றி விமர்சனம் செய்வதை விட்டு, விட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தினருக்கு ஆட்சி செய்யாமல், கோடிக்கணக்கான தொழிலாளர்களின், ஏழை, எளிய சாமானிய மக்களின் பிரச்சினைகளை களைகின்ற அரசாக ஆட்சி நடத்த உங்களது தலைமைக்கு அறிவுறுத்துங்கள்.
சு.ஆ.பொன்னுசாமி மாநில செயலாளர். “மக்கள் நீதி மய்யம்” தொழிலாளர்கள் அணி.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









