நுண்ணீர் பாசனத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாத இரண்டு நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது,ஆகவே விவசாயிகள் யாரும் அவர்களை அணுக வேண்டாம் என அறிவித்துள்ளார்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டம், தமிழ்நாட்டில் 2018 19ஆம் ஆண்டில் ரூ. 1671.15 கோடி நிதி ஒதுக்கீட்டில், 2.55 இலட்சம் எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 7.97 கோடி நிதி ஒதுக்கீட்டில் 881 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிப்பதற்காக வேளாண் உற்பத்தியாளர் மற்றும் முதன்மை செயலரின் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. ஆய்வு கூட்டத்தில் நுண்ணீர் பாசன நிறுவனத்தின் பிரதிநிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் “எவர்கிரீன் இரிகேசன்” மற்றும் “பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்” ஆகிய 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
எனவே அந்நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயினும், அந்நிறுவனங்கள் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினால் மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் யாரும் “எவர்கிரீன் இரிகேசன்” மற்றும் “பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்” ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









