இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவு மண்டபம் இன்று திறப்பு – இராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாகும் ‘பேய் கரும்பு’

இராமேஸ்வரம் அருகே பேய் கரும்பில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அவரது அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பில் மத்திய அரசு சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் பேய் கரும்பு ஒரு முக்கிய சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ளது.

இந்த நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம், நினைவு மண்டபம், நூலகம் உள்ளிட்ட கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவு மண்டபத்தின் திறப்பு விழாவிற்காக இன்று இராமேஸ்வரத்தில் நடக்கவிருக்கும் அரசு விழாவில் பிரதமர், தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதால் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கலாம் சலாம்’ என்ற கவிதை வடிவிலான பாடலை பள்ளி மாணவ மாணவியர் பாடுகின்றனர். ‘கலாம் 2020′ என்ற அறிவியல் வாகனமும் பொதுமக்கள் பார்வைக்கு துவக்கப்படுகிறது. மேலும் கலாம் நினைவிடத்தில், கலாமின் கடின உழைப்பில் உருவான அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. 45 அடி உயரத்தில் 4 டன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி ஏவுகணை நினைவு மண்டபத்தின் முகப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடம், மக்கள் பிரதிநிதிகள் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், பொதுக்கூட்ட மைதானம் ஆகியவற்றை சிறப்பு அதிரடிப்படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!