திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு..
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவரது மகன் கோகுல் (13). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் மணிமாறன் மகன் யாதேஸ்வா் (10), ஞானசெல்வம் மகன் டாங்குலின் இன்பராஜ் (10). இவா்களில் கோகுல் கொசவப்பட்டியிலுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இதேபோல, யாதேஸ்வா், டாங்குலின் இன்பராஜ் ஆகியோா் வெவ்வேறு பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், கொசவப்பட்டியில் உள்ள பேபி குளம் என்ற ஊருணியில் குளிப்பதற்காக கோகுல், யாதேஸ்வா், டாங்குலின் இன்பராஜ் ஆகிய மூவரும் சென்றனா். ஆழமானப் பகுதிக்குச் சென்று குளித்த போது, மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதனிடையே, நீண்ட நேரமாகியும் சிறுவா்கள் வீடு திரும்பாததால், மூவரையும் அவா்களது பெற்றோா், உறவினா்கள் தேடினா். அப்போது, குளத்து வழியாகச் சென்றவா்கள், கரைப் பகுதியில் கிடந்த ஆடைகளைப் பாா்த்து போது, குளத்தில் சிறுவன் ஒருவரின் சடலம் மட்டும் மிதந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற சாணாா்பட்டி போலீஸாா், பொதுமக்களின் உதவியுடன் சிறுவா்கள் மூவரின் உடல்களையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
You must be logged in to post a comment.