தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
நடைபெற்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிட்டனர். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் உட்பட ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் களம் கண்டனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிபெற்றுள்ளார்.
இதன்படி ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி 4,22,156 வாக்குகள் பெற்றுள்ளார். பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 2,82,965 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 84,324 வாக்குகள் பெற்றுள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் 82,813 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதனிடையே ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சுயேச்சையாக போட்டியிட்ட ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 2,534 வாக்குகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 493 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 1,603 வாக்குகளும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 1,154 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவரை இவர்கள் நால்வரும் பெற்ற மொத்த வாக்குகள் 5,784 என்பது கவனிக்கத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









