இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..!
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு இன்று அதிகாலை திருப்புல்லாணி அடுத்த தோப்புவலசை கடற்கரையிலிருந்து படகு மூலமாக உலர்ந்த இஞ்சி (சுக்கு) இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ஒருங்கிணைத்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சேதுகரையிலிருந்து தோப்புவலசை வரை கடற்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தோப்புவலசை கடற்கரை பகுதியில் 50 சாக்கு மூட்டைகளில் சுமார் இரண்டு டன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி மூட்டைகள் நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உலர்ந்த இஞ்சி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை திருப்புல்லாணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சியின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.